The star's friend - 1 in Tamil Love Stories by Bhavani Thiyagarajan books and stories PDF | நட்சத்திராவின் மித்ரன் - 1

Featured Books
Categories
Share

நட்சத்திராவின் மித்ரன் - 1

பாகம் 1

அது சிட்டியின் மத்தியிலிருக்கும் செல்வந்தர்கள் தங்கி இருக்கும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட்களில் அதுவும் ஒன்று.

ஐந்து அடுக்கு கட்டிடங்களை கொண்ட அந்த அப்பார்ட்மெண்ட்…
தனக்கு மிஞ்சிய அழகுக்கு எதுவும் நிகர் இல்லை என்பதுபோல் காலை சூரியனின் தங்க நிற கதிர்களில் மிடுக்குடன் ஜொலித்துக் கொண்டிருந்தது.

வெளியில் பார்க்கும் அனைவருக்கும் அது ஒரு கனவு வாழ்க்கை போல தோன்றும்.

ஆனால்…

அதே அப்பார்ட்மெண்டின் கீழ்தளத்தில் இருக்கும் சிறிய பாதுகாவலர் வீட்டிலிருந்து தான் இந்தக் கதை ஆரம்பமாகிறது… 

அதிகாலை நேரம் — 5:30.

“நட்சு… எழுந்திரு மா… தண்ணி வருது பாரு…”

அந்த அப்பார்ட்மெண்ட்  இன் சிறிய அறை முழுக்க மல்லிகாவின் குரல் ஒலித்தது.

தன்னுடைய கனவு உலகத்தில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த நட்சத்திராவை நிஜ உலகத்துக்கு இழுத்து வந்தார் அவளது தாய் மல்லிகா.

அதற்கு அடுத்த நொடியே…

“அக்கா சீக்கிரமா வா! என்னால பக்கெட் தூக்கிட்டு வர முடியல!”

என்று கத்தினாள் அவளது தங்கை நிலாஷா.

“அய்யய்யோ… எங்கயாச்சும் நிம்மதியா தூங்க விடுறீங்களா… காலங்காத்தால ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்…”

சலிப்புடன் முணுமுணுத்தபடி போர்வையை தலையிலே இழுத்துக் கொண்டான் கவின்.

அதை பார்த்த நிலாஷா உடனே,

“அம்மா! பாருங்கம்மா… இவன இன்னும் எந்திரிக்கவே இல்ல!” என்று குறை சொல்ல,

“டேய் கவின்… எழுந்திரு! தினமும் உன் கூட இதே போராட்டமா போச்சு?” என்று கிச்சன் லிருந்து கத்தினார் மல்லிகா.

ஆனால் அவரோ…

இவர்களின் சண்டை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றுக்கும் நடுவில் அமைதியாக சமையலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

சிறிய வீடு.
சின்ன ஹால் .
ஒரு திரை பின்னால் சமையலறை.
சுவரில் பழைய பேமிலி போட்டோ .

அந்த சின்ன வீட்டுக்குள் வசதி குறைவாக இருந்தாலும்…

வாழ்க்கை இருந்தது.
சத்தம் இருந்தது.
சிரிப்பு இருந்தது.
முக்கியமா…

அன்பு இருந்தது. 

“வரேண்டி… வரேண்டி… ஏன் கத்திக்கிட்டே இருக்க…”

என்று கண்களை பாதியாக திறந்தபடி எழுந்து அமர்ந்தாள் நட்சத்திரா.

சிதறிய தலைமுடி.
தூக்க கலந்த முகம்.

ஆனால் அவளது கண்களில் மட்டும் எப்போதும் போல ஒரு அமைதி இருந்தது.

அன்றைய நாளும்…

அந்த வீட்டில் இப்படித்தான் ஆரம்பமானது. 

வீட்டின் வெளியே அபார்ட்மெண்ட் வழித்தடம்.

காலை காற்று.
தண்ணீர் மோட்டார் சத்தம்.
சில மனிதர்களின் நடைப்பயிற்சி.

அந்த அதிகாலை நேரமே அபார்ட்மெண்ட் முழுக்க மெதுவாக விழித்துக் கொண்டிருந்தது.

கணேசன் ஏற்கனவே வேலைக்கு இறங்கி இருந்தார்.

அபார்ட்மெண்ட் வீட்டார்களுக்கு தண்ணீர் குழாய்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

சிலர் “அண்ணா…” என்று மரியாதையாக பேசுவார்கள்.

சிலர்…

அவரை வெறும் காவலாளி மாதிரி நடத்துவார்கள்.

ஆனால் அவர் ஒருபோதும் அதற்கெல்லாம் பதில் பேசமாட்டார்.

ஏனெனில்…

அவருக்கு முதலில் குடும்பம் முக்கியம்.

“அப்பா… காபி…”

என்று டம்ளரை நீட்டினாள் நட்சத்திரா.

கணேசன் அன்பாக அதை வாங்கிக் கொண்டார்.

“இன்னைக்கு தானே மா காலேஜ்ல ஃபேர்வெல்?”

அவள் கண்கள் ஒரு நொடி மின்னின.

“ஹ்ம்ம்…”

அடுத்த நிமிடம் நட்சத்திராவின் பார்வை பக்கவாட்டில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மல்லிகாவின் மீது திரும்பியது.

“அம்மா… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணும்மா…” என்று பார்வையாலேயே சைகை செய்தாள்.

அதை உடனே புரிந்து கொண்ட மல்லிகா இரண்டு அடி முன்னே வந்து,

“அதாங்க… இன்னிக்கு காலேஜ் ஃபேர்வெல்லுக்கு அழகா டிரஸ் பண்ணிட்டு போகணுமாம்…”

என்று தயக்கமாக ஆரம்பித்தார்.

“அந்த மூணாவது மாடி ஜெசிக்கா இருக்காள்ல… அவ கொடுத்த டிரஸ் போட்டுட்டு போறேன்னு காலையிலிருந்து என்ன நச்சரிச்சுக்கிட்டு இருக்கா…”

என்று மெதுவாக தன் கருத்தை கணவனிடம் சொல்லி முடித்தார்.

மல்லிகா பேசிக்கொண்டிருக்க…

கணேசன் எந்த பதிலும் சொல்லாமல் காலை சூரியனை ரசித்தபடி காபியை மெதுவாக ருசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் நின்ற நட்சத்திராவோ…

அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற பதட்டத்தில் நின்றாள்.

அவளது விரல்கள் கூட பதட்டமாக ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில்…

“அக்கா… இப்ப நீ வரப் போறியா இல்லையா?”

என்று மீண்டும் வீட்டுக்குள் இருந்து நிலாஷாவின் குரல் கேட்டது.

சரியான நேரத்தில் மூக்கை நுழைத்து காரியத்தை கெடுத்த தங்கையின் மீது கோபத்தில் திரும்பினாள் நட்சத்திரா.

“ஒரு ரெண்டு நிமிஷம் எங்கயாவது அமைதியா இருக்கியா டீ? என்னதான் பிரச்சனை உனக்கு?”

என்று முணுமுணுத்தபடி உள்ளே சென்றாள்.

“அக்கா எனக்கு நேரமாச்சு… இப்ப நான் தயாராக ஆரம்பிச்சா தான் சரியான நேரத்துக்கு பஸ் பிடிச்சு காலேஜ்க்கு போக முடியும்… நீ இதை பார்த்துக்க… நான் கிளம்புறேன்…”

என்று அவசர அவசரமாக பேசிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தாள் நிலாஷா.

“ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்திருக்க கூடாதா… அப்பா என்ன பதில் சொல்றாருன்னு கேட்டிருந்தேன்… எல்லாத்தையும் சொதப்பிட்டா…”

என்று தங்கையை மனதிற்குள் திட்டிக்கொண்டே மீண்டும் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் நட்சத்திரா.

ஆனால்…

அவளது மனசு மட்டும் இன்னும் அப்பாவின் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

வேகவேகமாக வீட்டில் இருக்கும் தன்னுடைய வேலைகளை முடித்து சமையலுக்கு உதவி செய்து, வீட்டை சுத்தம் செய்து, பம்பரம் போல வீடு முழுக்க சுழன்று கொண்டிருந்த நட்சத்திராவை பார்த்து,

“நட்சு… டைம் ஆச்சு மா… போய் குழந்தைகளை எழுப்பி ஸ்கூலுக்கு ரெடி பண்ணு…”

என்று சொன்னார் மல்லிகா.

“சரிம்மா…”

என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் நட்சத்திரா.

அறைக்குள் நுழைந்தவள்…

அங்கே தேவதைகளை போல தூங்கிக்கொண்டிருந்த ரிஷி, மீராவை பார்த்ததும் ஒரு நிமிஷம் அப்படியே நின்றுவிட்டாள்.

ஒருத்தன் தலையணையை கட்டிப்பிடித்து தூங்கிக்கொண்டிருக்க…

மற்றொருத்தி போர்வைக்குள் சுருண்டு கொண்டு அமைதியாக படுத்திருந்தாள்.

அவர்களை பார்த்தவளுக்கு தெரியாமலே சிரிப்பு வந்தது.

அதே நேரத்தில்…

அவர்களோட வாழ்க்கை நினைவுக்கு வந்ததும் மனசு கொஞ்சம் கனத்துப் போனது.

மல்லிகாவின் தங்கை ஜானகிக்கு…

கல்யாணம் ஆகி பல வருடங்கள் தவத்திற்கு பலனாக  பிறந்த இரட்டை குழந்தைகள் தான் இந்த ரிஷியும் மீராவும்.

குழந்தைகள் பிறந்த கொஞ்ச நாளிலேயே…

ஒரு விபத்தில் அவர்கள் அம்மா அப்பா இருவரையும் இழந்துவிட்டார்கள்.

அந்த நாள்…

என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்த அந்த குழந்தைகளை தன்னோட மார்போடு அணைத்துக்கொண்டு வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்தார் மல்லிகா.

அதன் பிறகு…

அவர்களும் இந்த குடும்பத்தோட ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்கள்.

அவர்களை ரசித்துக்கொண்டே நின்ற நட்சத்திரா…

நேரம் ஆனதை கவனிக்கவே இல்லை.

திடீரென்று சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

“அய்யோ… டைம் ஆயிடுச்சே!”

என்று அவசரமாக ரிஷியை எழுப்ப ஆரம்பித்தாள்.

“ரிஷி… எழுந்திரு டா… ஸ்கூலுக்கு கிளம்பணும்…”

“ம்ம்… இன்னும் கொஞ்ச நேரம்…”

என்று போர்வையை இன்னும் மேலே இழுத்துக்கொண்டான் அவன்.

“சரி… அப்போ இன்று சாக்லேட் பால் கிடையாது…”

என்று சொன்னதும்,

“அக்கா! நான் எழுந்துட்டேன்!”

என்று திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.

அதை பார்த்து சிரித்தவள் மீராவை நோக்கி திரும்பினாள்.

“மீரா குட்டி… எழுந்திரு மா…”

என்று மெதுவாக கன்னத்தை வருடினாள்.

“இன்னைக்கு ஸ்கூல் போகணுமா…”

என்று தூக்கக் கலக்கத்தோடு கேட்டாள் மீரா.

“ஆமாம்… சீக்கிரம் ரெடி ஆகு…”

என்று சொல்லிக்கொண்டே இருவரையும் குளிக்க வைக்க, உடை மாற்ற, சாப்பாடு ஊட்ட என்று ஒரே பரபரப்பாக ஓட ஆரம்பித்தாள் நட்சத்திரா.

அடுத்த அரை மணி நேரம் அந்த வீடு முழுக்க குழந்தைகளின் ஓட்டமும் சத்தமும் நிரம்பி வழிந்தது.

“அக்கா… அவன் என் வாட்டர் பாட்டில் எடுத்துட்டான்!”

“அக்கா… அவ தள்ளுறா!”

“ரிஷி… மீராவை அழவைக்காத டா!”

“மீரா… முதல்ல பல் துலக்கு!”

என்று ஒரே பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாள் நட்சத்திரா.

ஆனால்…

அந்த பரபரப்புக்குள்ளும் அவளது மனதின் ஓரம் மட்டும் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தையே நினைத்துக் கொண்டிருந்தது.

இன்று…

கல்லூரியின் கடைசி நாள்.

கொஞ்ச நேரத்திலேயே அந்த வீடே போர்க்களம் போல மாறிவிட்டது.

ஒவ்வொருத்தரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

நிலாஷா அவசர அவசரமாக பையை தோளில் மாட்டிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

கவினோ…

அவனுக்கு படிப்பு சரியாக வராத காரணத்தினால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு இப்போது அப்பாவுக்கு உதவியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.

“அம்மா நான் கிளம்புறேன்…”

என்று சொல்லிக்கொண்டே அவனும் வேகமாக வெளியேறிவிட்டான்.

அதற்குள் ரிஷி, மீராவும் பள்ளிக்குச் செல்ல தயாராகி விட்டார்கள்.

“அக்கா டாட்டா…”

என்று மீரா கன்னத்தில் முத்தம் கொடுக்க,

“ சாயந்திரம் வரும்போது   சாக்லேட் வாங்கிட்டு வா…”

என்று ரிஷி முக்கியமான கட்டளையை போட்டுவிட்டு சிரித்தான்.

“சரி சரி… ரெண்டு பேரும் ஒழுங்கா போயிட்டு வாங்க…”

என்று அவர்களை வழியனுப்பி வைத்தாள் நட்சத்திரா.

அடுத்த சில நிமிடங்களில்…

அந்த வீடு முழுக்க ஒரு வித்தியாசமான அமைதி சூழ்ந்தது.

சிறிது நேரம் அந்த அமைதியையே ரசித்தபடி நின்றிருந்தவளுக்கு திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது.

“அய்யோ…”

என்று சொல்லிக்கொண்டே வேகமாக சமையலறைக்குள் ஓடினாள்.

“அம்மா…”

என்று மல்லிகாவின் அருகில் வந்து நின்றவள்,

“என்ன மா?”

“அம்மா… என்ன ஓகேவா? ப்ளீஸ்மா…”

என்று குழந்தை போல கெஞ்ச ஆரம்பித்தாள்.

மல்லிகாவோ சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“உனக்கு பிடிச்சிருந்தா நீ அந்த டிரஸ் போட்டுக்கிட்டு போ காலேஜுக்கு…”

என்று சொல்லிவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த ஒரு நொடியில் நட்சத்திராவின் முகமே மலர்ந்துவிட்டது.

“ரொம்ப தேங்க்ஸ்மா…”

என்று சொல்லிக்கொண்டே மல்லிகாவின் கன்னத்தை கிள்ளி இரண்டு மூன்று முத்தங்கள் கொடுத்தாள்.

“ஏய் போதும் டி… பெரிய குழந்தை மாதிரி…”

என்று மல்லிகா சிரிக்க,

“இன்னைக்கு மட்டும் நான் குழந்தைதான்…”

என்று சிரித்தபடியே வேகமாக தன்னுடைய அறையை நோக்கி ஓடினாள் நட்சத்திரா.

அவளது மனசு முழுக்க இப்போது ஒரே பரபரப்பு.

இன்று…

அவனை பார்க்கப் போகிறாள்.

வேகமாக தன்னுடைய அறைக்குள் ஓடி வந்த நட்சத்திரா உடனே தன்னுடைய கைபேசியை தேடி எடுத்தாள்.

திரையை திறந்து பார்த்தவளோ…

“அச்சச்சோ…”

என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.

யாழினியிடமிருந்து ஏற்கனவே நிறைய தவறிய அழைப்புகள் வந்திருந்தது.

“இவ ஏன் இவ்வளவு தடவை போன் பண்ணிருக்கா…”

என்று முணுமுணுத்தபடி உடனே யாழினிக்கு அழைத்தாள்.

நட்சத்திராவுக்கு நண்பர்கள் என்றால் மிகவும் நெருக்கமாக இருப்பது இரண்டு பேர் தான்.

யாழினி.
ஹரிணி.

அதில் யாழினி…

நட்சத்திராவின் மனசை வார்த்தைகள் இல்லாமலே புரிந்துகொள்ளும் தோழி.

அவள் பார்வையை பார்த்தாலே கூட ஏதோ சரியில்லை என்று கண்டுபிடித்துவிடுவாள்.

ஹரிணியோ…

அந்த அளவுக்கு உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டாள்.

ஆனால்…

நட்சத்திராவின் காதல் நிறைவேற வேண்டும் என்று மனசார நினைப்பவள்.

குறிப்பாக…

“இவ்வளவு வருடமா ஒருத்தனை மட்டும் காதலிக்கிற… அதுவும் ரகசியமா அவனுக்கு கூட தெரியாம… கண்டிப்பா உனக்கு அவன் கிடைக்கணும்…”

என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அழைப்பு இணைந்ததும் மறுபக்கம் இருந்து யாழினியின் சத்தம் கேட்டது.

“ஹலோ… நீ இந்த உலகத்துல தான் இருக்கியா இல்லையா? எத்தனை தடவை கால் பண்றது உனக்கு?”

“சாரி டி… நான் பார்க்கவே இல்ல…”

“சரி விடு… இன்னைக்கு பிளான் என்ன?”

“எதுக்கு?”

“அடிப்பாவி… இன்னைக்கு ஃபேர்வெல்! அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?”

அதை கேட்டவள் சிரித்துக்கொண்டே,

“எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு… நான் எப்படியோ ரொம்ப கஷ்டப்பட்டு அம்மாவையும் அப்பாவையும் ஓகே சொல்ல வைத்துட்டேன்…”

என்று பெருமையாக சொல்ல,

“அட சூப்பர் பா!”

என்று கத்தினாள் யாழினி.

“அப்போ நீ சொன்னியே அந்த ப்ளூ ஏஞ்சல் டிரஸ்… அதுதான் போடப் போறியா?”

“ஆமா… அத போட ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள என் பாடு போதும்னு ஆயிடுச்சு…”

“ஹாஹா… ஆனா கண்டிப்பா செமையா இருப்ப…”

என்று யாழினி சொல்ல,

அதை கேட்ட நட்சத்திராவின் முகம் தெரியாமலே சிவந்தது.

“சரி சரி… நம்ம எங்க மீட் பண்ணலாம் சொல்லு…”
என்று கேட்டாள் நட்சத்திரா.

அதற்குப் பிறகு இருவரும் வேகவேகமாக இன்றைய திட்டங்களை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

ஆனால்…

அந்த பேச்சின் இடையிலும் நட்சத்திராவின் மனசு மட்டும் ஒரு விஷயத்தையே நினைத்துக்கொண்டிருந்தது.

இன்று…

கடைசியாக மித்ரனை பார்க்கப் போகிறாள்.

ஒரு முறையாவது…

அவன் தன்னை பார்க்க வேண்டும் என்பதே அவளுடைய மனதின் மிகப்பெரிய ஆசை.

அந்த ஒரு பார்வையிலேயே…

தன்னுடைய பல வருட காதலின் ஏக்கம் நிவர்த்தியாகும். வாழ போகும் நாட்கள் மொத்தமும் அவனுடைய பார்வை ஒன்றே போதுமானது  என்று நம்பிக்கையோடு இருந்தாள் நட்சத்திரா.

அவளுக்கு அது ஒரு ஃபேர்வெல்  அல்ல… பல வருடங்களாக மனசுக்குள் வாழ்ந்த காதலின் கடைசி வாய்ப்பு.

அவளுக்கு…

அவளுடைய காதலின் பார்வை கிடைக்குமா…?

காத்திருப்போம்…

தொடரும்…💕


ஹாய் பிரண்ட்ஸ் 💗

என்னோட ஸ்டோரி எப்படி இருக்குன்னு படிச்சுட்டு உங்களோட கருத்துகளை கண்டிப்பா சொல்லுங்க 😊
உங்களோட ஒவ்வொரு கமெண்டும் எனக்கு ரொம்ப பெரிய மோட்டிவேஷன் ❤️

கதை பிடிச்சிருந்தா லைக், கமெண்ட், ஷேர் பண்ண மறக்காதீங்க 🙏🙏

உங்களோட கமெண்ட்ஸ்க்காக ஆவலோட காத்துகிட்டு இருக்கேன் 💕🤗