கனவு 13
ஹரிதா மனதில் சலன அலை அடிக்கத்தொடங்கியது. இது அவளுக்கே புதிராய் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு லேப்டாப்பை எடுத்தாள். அவள் மனம் திடுக்கிட்டது . நாம் செய்வது சரியா தவறா என பல யோசனைகள் ஓடியது. வெப்சைட் அட்ரஸ் போட்டு பார்த்ததும் சீ இதற்குத்தான் இத்தனை அக்கப்போரா ? என்றாகிவிட்டது. லேப்டாப்பை அணைத்தாள். ஹிஸ்டரி டெலீட் செய்தாள் . சௌமியாவுக்கு ஃபோன் பண்ணினாள். என்னடி என்ன ஆச்சு ஏன் பதட்டமாய் இருக்கிறாய் எனக் கேட்டாள் சௌமியா. இவள் விஷயத்தை சொன்னாள். உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு நான் ஒன்றும் உன்னை கட்டாயப்படுத்தவில்லையே என்று சொன்னாள் சௌமியா. சரி நான் நாளைக்கு பேசுகிறேன் என்றாள் ஹரிதா. சௌமியா சிரித்து கொண்டாள் ஹரிதா பயந்துவிட்டாள் போல என்றெண்ணிக்கொண்டாள் . இவள் பதட்டம் அப்போதைக்கு குறைந்திருந்தது. யாருக்காவது இது தெரிந்தால் ?தெரிந்தால் என்ன அவர்கள் பார்த்திருக்க மாட்டார்களா என்ன? இப்படியாக அந்த இரவு கடந்தது.
மறுநாள் சௌமியா இவளை பார்த்ததும் என்னடி ஆபரேஷன் சக்ஸஸா என்றாள். அதெல்லாம் இல்லை எனக்கு பிடிக்கவில்லை என்றாள் ஹரிதா. ம் இப்படியே இருந்தால் எப்படி ? அப்புறம் கல்யாணம் என்று வந்தால் என்ன செய்வாய் என்று கேட்டாள் சௌமியா. அதெல்லாம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் . ஆறுமுகம் வந்தான். என்ன ஆறுமுகம் சோர்வாய் இருக்கிறாய் உனக்கு என்ன ஆச்சு என்றாள் ஹரிதா. நைட் தூங்க விடாமல் ரகளை பண்ணுகிறார்கள் ஹாஸ்டலில் என்றான். ம் இதெல்லாம் சகஜம் இப்போது என்றாள் சௌமியா. ஆறுமுகம் சீக்கிரம் வந்துவிட்டபடியால் டெஸ்க் மீது சாய்ந்து கொஞ்ச நேரம் தூங்கினான். சௌமியா ஆறுமுகத்திடம் எதுவும் சொல்லாதே என்றாள் ஹரிதா. சே சே அப்படிஎல்லாம் செய்யமாட்டேன் என்றாள். மனம் ஒரு நிமிஷத்தில் எப்படி நிலையில்லாமல் போய்விட்டது. சாயங்காலம் கோவிலுக்கு போக வேண்டும் என நினைத்துக்கொண்டாள். சாயங்காலம் 8 மணிக்குத்தான் போக முடிந்தது. கடவுளே எனக்கு நல்ல புத்தியை கொடு என்னால் என்னையே நம்ப முடியாமல் செய்யாதே என்று வேண்டிக்கொண்டாள். இவள் அம்மா என்னடி வேண்டுதல் எல்லாம் பலமாக இருக்கிறதே என்றாள். அதெல்லாம் ஒன்றுமில்லை எக்ஸாம் வருகிறதல்லவா அதுதான் என்று கூறி சமாளித்தாள்.
ரம்யா டீச்சர் அங்கிருந்த ஸ்டூடண்ட்ஸ் எல்லோருக்கும் பொதுவாய் சில விஷயங்களை சொன்னாள். நாம் கெட்ட விஷயங்கள் மீது கொண்டிருக்கும் ஆர்வம் இருமுனை கத்தி போன்றது. அது எந்த நேரமும் நம்மையே கிழித்து விடும் என்றாள். இது சில மாணவர்களை குழம்ப செய்தது. நீங்கள் நல்ல விஷயங்களை பின்தொடருங்கள் என்றும் கூறினாள். என்ன டீச்சர் திடீர் என்று இப்படி அட்வைஸ் சொல்லுகிறார்கள் என்று எல்லோருமே யோசித்தார்கள். டீச்சரிடமே கேட்டுவிட்டாள் ஹரிதா. அதெல்லாம் ஒன்றுமில்லை சில ஆபத்தான வெப்சைட்களை பசங்கள் தங்கள் லேப்டாப்பில் பார்ப்பதாய் கேள்விப்பட்டேன் அதுதான் அப்படி சொன்னேன் என்றாள். ஓ அதுதான் விஷயமா என ஹரிதா சொன்னாள். ரம்யா டீச்சர் நம்பரை ஹரிதா கேட்டு வாங்கிக் கொண்டாள். எந்த சந்தேகம் இருந்தாலும் கூப்பிடு என ரம்யா டீச்சர் சொல்லியிருந்தாள். ஹரிதா ஒரு வழியாய் அந்த சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள் . மனதிலே இருந்த குழப்பம் எல்லாம் நீங்கியது போல இருந்தது. ரஞ்சித்தை பிளாக் லிஸ்டில் இருந்து எடுத்து விட்டாள். அவன் எப்போதும் போல பேசினான். இவளை நலம் விசாரித்தான். அங்குள்ள சூழ்நிலை பற்றி சொன்னான். இவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். தான் சௌமியா ரஞ்சித் இடையே பிரிவு ஏற்படக் காரணமாய் இருந்துவிடக் கூடாதென்பது அவள் எண்ணம்.
இளங்கோ சில நாட்களாய் சோர்வடைந்தவராக காணப்பட்டார். என்ன விஷயம் என்று ஆறுமுகம் அவரிடமே கேட்டான். அதெல்லாம் ஒன்றுமில்லை எல்லா ஸ்கூல் நிர்வாகமும் செய்யும் பொலிட்டிக்ஸ் தான் என்றார் அவர். நான் தேவைக்கதிகமாக விளையாட்டுக்கு செலவு செய்கிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை பசங்களுக்கு நல்லது எதுவோ அதைத்தான் செய்கிறேன் .. செய்தேன் எப்பவும் செய்வேன் என்றார். நீ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே ஆறுமுகம் நான் இல்லாவிட்டாலும் நீ நன்கு பயிற்சி பெற வேண்டும் என்றும் சொன்னார். ஆறுமுகம் ஹரிதாவிடம் நடந்ததை சொன்னான் .என்ன இருந்தாலும் ஸ்கூல் நிர்வாகம் அப்படி சொல்லியிருக்க கூடாது என்றாள். சௌமியா எதுவும் சொல்லவில்லை. ரஞ்சித்திடம் பேசியதாக ஹரிதா சொன்னாள். அவன் என்னிடமும் சொன்னான். அவனுக்கு முன்பு போல என்னிடத்தில் பிரியம் இல்லை என்றாள் சௌமியா. அதென்ன அப்படி சொல்லிவிட்டாய் எப்படி சொல்கிறாய். அவன் இப்போது மாறிவிட்டான்.சரி இதற்கு மேல் கேட்காதே வேறு ஏதாவது பேசு என்றாள்.
நாம் மூவரும் நாளைக்கு சினிமா போவோமா என்றாள் ஹரிதா. ஆறுமுகம் வருவானா என்றாள் சௌமியா. அவனுக்காகத்தான் இந்த சினிமா ஐடியாவே. என்ன அவனுக்கு அவனுக்கு கொஞ்சம் கூட நேரம் இல்லை. சமீபமாக ரொம்ப சோர்வடைந்து போயிருக்கிறான் என்றாள் ஹரிதா. ஆறுமுகம் முதலில் வரவில்லை என்றான் . பிறகு சௌமியாவும் வருகிறாள் என்றதும் ஒத்துக்கொண்டான். படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் ஆக இருந்தது. ஹரிதாவுக்கு பிடித்திருந்தது. வில்லனிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்றும் ஹீரோ . இந்த கான்செப்ட் மட்டும் மாறவே மாறாது என்றாள் சௌமியா. ஆறுமுகம் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான். ஹரிதாதான் எழுப்பி விட்டாள். அவன் சௌமியாவை சிறிது நேரம் இருட்டில் பார்த்துக்கொண்டிருந்தான். இண்டர்வெல் போது காபி வாங்கி கொடுத்தாள் ஹரிதா. என்னமாய் தூங்குகிறாய் ஆறுமுகம் என்று சிரித்தாள் ஹரிதா. என்னவோ ஏ சி அறை மயக்கத்தை தந்துவிட்டது என்றான். சௌமியா ஐஸ் கிரீம் சாப்பிட்டாள். படம் முடியும் போது ஆறுமுகம் உற்சாகமாகிவிட்டான். அவனுக்குள் அந்த ஹீரோ பேசிய வசனங்கள் புதிய உத்வேகத்தை தந்தன. படம் முடிந்து வெளியே வரும்போது அவர்கள் சமரை பார்த்தார்கள். சமர் இவர்களை பார்த்தான் என்றுதான் சொல்லவேண்டும் . இவர்கள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து போனார்கள். ஆறுமுகமும், சௌமியாவும் விடைபெற்றுக்கொண்டார்கள்.
எதற்க்கு சமர் அப்படி பார்த்தான் பேசாமல் பார்வையை திருப்பிக்கொண்டு போக வேண்டியதுதானே என்ன அதென்ன அப்படி ஒரு பார்வை . இவள் கவனத்தை மாற்ற முயன்றாள். கொஞ்ச நேரம் ஈவினிங் படிக்கலாம் என்று நினைத்தாள். அப்படி படிப்பது ஒன்றுதான் நினைவை சரி பண்ணும் ஒரே வழி என்று கருதினாள் . சமர் ஃபோன் பண்ணியிருந்ததாக சௌமியா சொன்னாள். நீ ஏண்டி அட்டென்ட் பண்ணினே என்றாள் ஹரிதா. ஏதோ புது நம்பரில் இருந்து கால் பண்ணியிருந்தான். ம் என்ன சொன்னான். ஏன் பார்த்தும் பார்க்காத மாதிரி போனாய் என்று கேட்டான். நீ என்ன சொன்னாய். நீ பார்த்த விதம் அத்தனை ஃப்ரெண்ட்லியாய் இல்லை என்றேன். அவன் போனை வைத்துவிட்டான். ஆறுமுகம் மறுநாள் அதே சினிமா பற்றி பேசிக்கொண்டிருந்தான். தாங்க்ஸ் ஹரிதா எனக்கொரு வித்தியாசமான அனுபவம் என்றான். நிஜமாகத்தான் சொல்கிறாயா அது ஒரு மசாலா படம் என்றாள் ஹரிதா. எப்போதும் வில்லனை வீழ்த்துவது நியாயம் என்று ஆகிவிட்டது. அது எனக்கு பிடித்திருந்தது என்றான். ம் அடுத்த முறை நீயே எங்களை ஏதாவதொரு சினிமாவுக்கு அழைத்து போ என்றாள் ஹரிதா. நிச்சயமா நான் கூப்பிட்டால் சௌமியா வருவாளா என்றான். ம் இது தேவைதானா ஆறுமுகம் ? உன் காதல் இன்னமும் நீடிக்கிறதா என்றாள். அவன் அமைதியாய் இருந்தான்.
சினிமா, காதல், காமம் இவற்றிற்கு உள்ள நெருங்கிய தொடர்பை நினைத்து பார்த்தாள் ஹரிதா. இதைத்தான் கற்பனை வழி நிஜமாக்க எல்லாரும் துடிக்கிறார்களோ என்று சிந்தித்தாள். அதில் பாதி உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. நாம் நம்மால் முடியாததை செய்துமுடிக்கும் ஆள் மீது காதல் கொள்கிறோம். அப்படித்தான் சமர் மீது ஈர்ப்பு வந்தது போல. மறுபடியும் சமரிடமே மனம் சுற்றி வருவது போல மாயை தோன்றியது. அவனுக்கென்ன இந்நேரம் மகிழ்ச்சியாய் இருப்பான் அவனுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும் வரை யாரையாவது சுற்றி வருவான் என்று சொல்லிக்கொண்டாள். நாம் ஒருவரைத்தான் நேசிக்கவேண்டும் அவரையே கல்யாணமும் பண்ணிக்கொள்ள வேண்டும். யார் போட்ட விதி இது. போதும் இந்த சிந்தனைகள் படுத்தும் பாடு. அவன் எக்கேடோ கெட்டு போகிறான் அவனுக்கு யார் சர்டிபிகேட் கேட்பார்கள். நாமெல்லாம் கற்பை நிரூபிக்க படாத பாடு பட வேண்டும் என்று நினைத்தாள். மனம் அமைதி இழக்க தொடங்கிவிட்டது என்பது போல அவளுக்கு தோன்றியது. அவளே கிச்சன் போய் காபி போட துவங்கினாள். காபி நல்லதொரு மணம் வீசியது.
சௌமியா நம் ஊரில் மேஜிக் ஷோ நடக்கிறதாமே போகலாமா ஹரிதா என்றாள். இல்லை கம்ப்யூட்டர் கிளாஸ் மிஸ் பண்ண நான் விரும்பவில்லை என்றாள் . அதெல்லாம் நான் சொல்லித்தருகிறேன் நீ கவலைப்படாதே என்றாள் சௌமியா. நாம் இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால் .. ஆறுமுகத்தை கூட்டிக்கொண்டு போ என்றாள் . நீ சொல்வதும் சரிதான் அவன்தான் இதற்கு சரியான ஆள். அவன் உடனே ஒத்துக்கொண்டான். ஹரிதா மகிழ்ச்சி அடைந்தாள். ஆறுமுகமும் சௌமியாவும் மேஜிக் ஷோ பார்த்தார்கள். ஆறுமுகம் ஒரு பங்கேற்பாளராக தைரியமாக கலந்து கொண்டான். எல்லோரும் கைதட்டினார்கள். அவனுக்கு சிறிய பரிசு ஒன்றும் கிடைத்தது. அதை சௌமியாவிடம் கொடுத்துவிட்டான். என்னுடைய ஞாபகமாக இருக்கட்டும் என்றான். அவள் ஏதும் சொல்லவில்லை.ஹரிதா ஃபோன் பண்ணியிருந்தாள். எப்படி இருந்தது மேஜிக் ஷோ என்று ? மேஜிக் ஷோ நன்றாக இருந்தது நீதான் மிஸ் பண்ணி விட்டாய் என்றாள் சௌமியா. சாரி என்னால் நிஜமாகவே அப்போது வர முடியவில்லை என்றாள். இட்ஸ் ஓகே . ஆறுமுகம் அதில் கலந்து கொண்டான் என்றாள் சௌமியா.அவர்கள் தொடர்ந்து பேசினார்கள்.
ஆறுமுகம் சௌமியாவோடு மேஜிக் ஷோ போன செல்பியை சௌமியா ஹரிதாவோடு பகிர்ந்து கொண்டாள். கியூட் கப்புள் என்று ஹரிதா சொன்னாள். அதை சௌமியா பெரிது படுத்தவில்லை. அப்பா, அம்மாவோடு தானும் அந்த மேஜிக் ஷோ போகவேண்டும் என ஹரிதா நினைத்தாள். அப்பாவுக்கு நேரமில்லை . அம்மா அப்பா இல்லாமல் எங்கும் வர மாட்டாள். ம் இப்படியே வாழ்க்கை நகர்ந்தது. ரஞ்சித் ஆறுமுகம் பற்றி ஹரிதாவிடம் விசாரித்தான். அவன் சௌமியாவை விரும்புவதாக சௌமியாவே சொன்னதாக ரஞ்சித் சொன்னான். அது முடிந்து போன கதை என்று ஹரிதா சொன்னாள். அவன் கண்களில் இன்னும் சௌமியா மீதான காதல் இருக்கிறது என்று ரஞ்சித் சொன்னான். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நான் அங்கு சௌமியா கூட இல்லையே என்ற ஏக்கம் நிஜமாகவே இருக்கிறது என்றான் ரஞ்சித்.